×

முதல்வர் காணொலியில் திறந்த கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படத் துவங்கியது

ஆண்டிபட்டி, பிப்.7: தினகரன் செய்தி எதிரொலியால் ஆண்டிபட்டி அருகே தமிழக முதல்வரால் காணொலியால் திறந்து வைக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் நேற்று முதல் செயல்படத் துவங்கியது. இதனால் 15 கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே கண்டமனூர், புது ராமச்சந்திரபுரம், வேலாயுதபுரம், கணேசபுரம், எட்டப்பராஜபுரம், ஜி.உசிலம்பட்டி ஆகிய கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அவ்வப்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் புகார் மனுக்களை கொடுத்து வந்தனர். இதனடிப்படையில் அரசு குடிநீர் வடிகால் வாரிய துறை சார்பில் ரூ. 550 லட்சம் மதிப்பீட்டில் நிதியை ஒதுக்கீடு செய்து, கடந்த 2017 ஆம் ஆணடு ஜூலை மாதம் 20ம் தேதியில் வேலை துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி முல்லைப் பெரியாற்றில் உறைகிணறுகள் மற்றும் சத்திரபட்டி அருகே நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து ராட்சத குழாய்கள் பூமிக்கடியில் பதிக்கப்பட்டு கண்டமனூரில் உள்ள குடிநீர் சேகரிப்பு தொட்டிக்கு வந்தடைகிறது. அங்கிருந்து நவீன மோட்டர்கள் மூலமாக அங்குள்ள மேல்நிலைத் தொட்டிகள், வேலாயுதபுரம், ஜி.உசிலம்பட்டி உள்ளிட்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள் இணைக்கப்பட்டது.

ஆனால், பணிகள் முடிவுற்று நீண்ட நாட்களாகியும் திட்டம் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இது சம்பந்தமாக தினகரனில் செய்தியாக வெளியிட்டோம். இதனையடுத்து கடந்த ஜன.10ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலமாக இந்த கூட்டு குடிநீர் திட்டத்தை திறந்து வைத்தார். ஆனால், சில நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்ட நிலையில் திடீரென கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தண்ணீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 4ம் தேதி செய்தி பிரசுரமானது. இதனையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் நேற்று குடிநீர் வடிகால் வாரியத்தினர் பழுதுகளை சரி செய்து குடிநீரை கிராம பொதுமக்களுக்கு வழங்கினர். இதனால் 15 கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் தினகரன் நாளிதழுக்கு நன்றியைத் தெரிவித்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், `` தங்கு தடையின்றி போதிய குடிநீர் வழங்க வேண்டும் என்றால் ஊத்துக்குளி திட்டத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையில் மாவட்ட கலெக்டர் ஈடுபட வேண்டும்’’ என்று கூறினர்

Tags : Chief Minister ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...